*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 598 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக விவசாய சங்க மாநில தலைவர் எஸ்ஏ சின்னசாமி: ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்தினால், சொந்த ஊரில் விவசாயத்தை கவனித்துக்கொண்டு, விவசாயிகள் குடும்பத்துடன் இருக்கும் நிலை ஏற்படும். எண்ணேகோல்புதூர் – தும்பலஅள்ளி அணை நீர்பாசன திட்டம், அலியாளம் -தூள் செட்டி ஏரி நீர்பாசன திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். சனத்குமார நதி கால்வாயை தூர்வார வேண்டும் என்றார்.
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன்: தர்மபுரி சிப்ஹாட்டிற்காக 948 ஏக்கர் கால்நடை மேய்ச்சல் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வட்டுவனஅள்ளியில் மேய்ச்சல் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கால்நடை மேய்ச்சலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கரும்புக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்டத்தில் 1.90 லட்சம் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டில் மொத்தம் 73 ஆயிரம் மண்பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. எனவே, மண் பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.
சிபிஐ விவசாய சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி: ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தீவன விலை உயர்வால், எருமை பால் லிட்டருக்கு ₹60, பசும்பால் லிட்டருக்கு ₹50 உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். விவசாயி முருகேசன்: தர்மபுரி குண்டலப்பட்டியில் போலி மது உற்பத்தி செய்து, மாவட்டம் முழுவதும் அதிகாலை நேரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சாந்தி பேசியதாவது:
ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டம், அரசு பார்வையில் உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 942 மில்லி மீட்டர். இதுவரை 421.49 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், தற்போது வரை 51,144 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டு வளர்ச்சித்துறை மூலம் 2024-2025ம் ஆண்டிற்கு 750 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, தற்பொது வரை 198 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024- 2025) உரத்தேவை 41,030 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, பொட்டாஷ் மொபலிசிங் பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க்சொலி பிலைசிங் பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024-2025ம் ஆண்டிற்கு 55 ஆயிரம் லிட்டர் எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 1,520 லிட்டர் எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று கொள்ளலாம்.
பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 70,054 குவிண்டாலும், கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1,25,544 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது. மொத்தம் 2 சர்க்கரை ஆலையிலும் 1 லட்சத்து 95 ஆயிரத்து 598 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், டிஆர்ஒ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு)ரவி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) இளவரசன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) மலர்விழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாத்திமா, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.