சென்னை: விமானநிலைய ஒப்பந்த ஊழியர் டிபன் பாக்சில் 1.2 கிலோ தங்கப்பசை சிக்கியது. அவரை பிடித்து சுங்கத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையத்தில், தூய்மை பணியாளர் பிரிவில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்கள், தங்கள் பணி முடிந்து நேற்று முன்தினம் வெளியே சென்று கொண்டிருந்தனர். நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் வழக்கம் போல் ஊழியர்களை பரிசோதித்தனர். அப்போது ஒரு ஒப்பந்த ஊழியரின் டிபன் பாக்ஸ்சில் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை நிறுத்தி வைத்துவிட்டு, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, தங்கப்பசையை ஆய்வு செய்தனர். 1.2 கிலோ தங்க பசை இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 62 லட்சம்.இதையடுத்து ஒப்பந்த ஊழியரை, தங்களது அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அப்போது அதிகாலையில் இலங்கையை சேர்ந்தவர், துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். அவர், சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இந்த தங்க பசையை கடத்தி வந்துள்ளார். அதை ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து, விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு சென்றால் அங்கு ஒருவர் இருப்பார், அவரிடம் ஒப்படைத்தால் அன்பளிப்பாக பணம் கொடுப்பார் என கூறியதாக தெரியவந்தது. இதையடுத்து ஒப்பந்த ஊழியரை கைது செய்து 1.2 கிலோ தங்க பசையையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் இலங்கை சேர்ந்த அந்த கடத்தல் ஆசாமி, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு தப்பி சென்றது தெரிந்தது. இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.