வேலூர் கோட்டை போலீஸ் பயிற்சி பள்ளியில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கு நாளை பயிற்சி துவக்கம்: டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு
வேலூர், டிச.3: வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் நாளை புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 200 பேருக்கு பயிற்சி துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று காலை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சமீபத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பெண் காவலர்கள் 200 பேருக்கு நாளை வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி தொடங்குகிறது. முதல் 7 மாதங்கள் அடிப்படை பயிற்சியும் இரண்டு மாதங்கள் செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை மேற்கொள்ள உள்ள 2ம் பெண் காவலர்கள் 200 பேரும் தமிழகத்தின் 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடுகளை டிஜிபி சந்தீப்ராய்ரத்தோர் நேற்று ஆய்வு செய்ய வந்தார். அவரை எஸ்பி மதிவாணன், பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் விநாயகம், முதன்மை சட்ட போதகர் கனிமொழி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதை எடுத்து மரக்கன்று அவர் நட்டு வைத்தார். தொடர்ந்து பெண் காவலர்கள் பயிற்சி பெறும் வகுப்பறைகள் தங்கும் விடுதி மற்றும் உணவு கூடம் போன்ற இடங்களை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.


