கடலூர், டிச. 3: பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. இந்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் காரணமாக கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று அதிகாலை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடலூர் செமண்டலம் குறிஞ்சி நகர், பெண்ணை நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக படகுகள் மூலம் மீட்டனர்.
இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் குறிஞ்சி நகரில் வெள்ள நீர் சூழ்ந்த ஒரு வீட்டில் இருந்த சிறுவனை தீயணைப்பு வீரர் ஒருவர் தூக்கி வந்து படகில் அமர வைத்தார். அப்போது அந்த சிறுவன் சந்தோஷத்தில் அந்த தீயணைப்பு வீரருக்கு முத்தம் கொடுத்தான். பதிலுக்கு அந்த தீயணைப்பு வீரரும் அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்தார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அந்த சிறுவன் கூறுகையில், எனது பெயர் சபரீஷ் பிரபு. காலை 5 மணி அளவில் எங்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர் வந்தது. இதனால் நான் எனது பெற்றோரிடம் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். ஆனால் அதற்குள் அதிக அளவில் நீர் வந்துவிட்டது. வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் மாடியில் கொண்டு சென்று வைத்து விட்டோம். தீயணைப்பு வீரர்கள் எங்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியே அழைத்து வந்துவிட்டனர். என்று கூறினான்.


