வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த
திருவண்ணாமலை, பிப்.6: செங்கம் அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, புதுப்பாளையம் அடுத்த வீராணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு மகன் வினோத்(26). இவர், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுமையை மிரட்டி பைக்கில் கடத்திச்சென்று கடந்த 5.11.2020 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தகவல் அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, புதுப்பாளையம் போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடத்தலுக்கு உடனடியாக இருந்த அவரது உறவினர் விஜயா என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் வினோத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். உறவினர் விஜயா என்பவர் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத்தை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


