ஊட்டி, பிப். 8: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகளிலும் சீரமைப்பு மற்றும் பேட்ச் ஒர்க் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசன் நெருங்கும் நிலையில், நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்கும் பணிகளையும், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தற்போது எட்டின் சாலையில், ஏடிசி பகுதி முதல் மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையில் என்டிசி பகுதி வரை உள்ள சாலையோரங்களில் தற்போது மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அதேசமயம் இந்த மழை நீர் வடிகால் அமைப்பதன் மூலம் இச்சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்த வாய்ப்புள்ளது. இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இச்சாலையில் ஏடிசி, முதல் என்டிசி வரை சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கவும், அங்காங்கே முளைக்கும் வாடக வாகனங்களின் ஸ்டாண்டுகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


