அன்னூர்,ஜன.31: அன்னூரில் வசித்து வந்த சம்மு கணேஷ் (26) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரும் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு வருடங்களாக பணிபுரிந்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சம்மு கணேஷ் பழகி வரும் பெண்ணுக்கு தெரியாமல், மற்றொரு பெண்ணை முன்கூட்டியே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதனை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அறிந்த பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதையறிந்த சம்மு கணேஷ் தன்னை விட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்யக்கூடாது என்று மிரட்டி, தனிமையில் உல்லாசமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். எனவே கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சம்மு கணேஷை கைது செய்தார். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


