திருக்கோவிலூர், ஜன. 12: திருக்கோவிலூர் அடுத்த பெரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதர் (60), விவசாயி, இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கம் தேடிப்பார்த்து விட்டு, பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள பகுதிகளில் தேடி பார்க்கும் போது வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ரங்கநாதன் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரங்கநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் புஷ்பா திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


