Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பருத்தி, மிளகாய்க்கு செய்நேர்த்தி செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்: வேளாண்துறையினர் ஆலோசனை

பழநி, நவ. 14: செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் மேற்கொண்டால் பருத்தி, மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைக்கும் என வேளாண்மை துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: பருத்தி, மிளகாய் போன்றவற்றை அறுவடை செய்து அப்படியே விற்பனைக்கு கொண்டு செல்வதால் விலை குறைவாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சில செய்நேர்த்தி தொழில்நுட்பங்களை மேற்கொள்வதின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

பருத்தியை பொறுத்தளவில் சுத்தத்தன்மை, நிறம், மென்மை, குறைவான ஈரம் ஆகிய நான்கும் விலையை தீர்மானிக்கும். எனவே நன்கு மலர்ந்த பருத்தியை மட்டும் செடியில் இருந்து பறிக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு ஒருமுறை பருத்தியை பறிக்கலாம்.

காலை நேரங்களில் பறிப்பது சிறந்தது. அப்போது தான் காய்ந்த இலை, சருகுகள் பருத்தியில் ஒட்டாது. சேகரித்த பருத்தியை நிழல், மணல் பரப்பிய களங்களில் காயப்போட வேண்டும். நேரடி வெயிலில் உலர வைத்தால் பஞ்சின்நிறம் குறைந்து விடுவதுடன் மென்மை தன்மையும் பாதிக்கும். பின்பு நன்கு உலர்த்தி, சருகுகள், பூச்சிநோய் தாக்கியது, கொட்டைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். தொடர்ந்து காற்றோட்டமான அறைகளில் மணல் பரப்பிய தரையில் சேமிக்க வேண்டும். பருத்தியை ரகம் வாரியாக தனித்தனியாக சேமிப்பது நல்லது.

மிளகாய்

மிளகாயில் பூஞ்சாண கொல்லிகள் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பறிக்கலாம். பழங்களை பறித்த அன்றே காயப்போட வேண்டும். மணல்பரப்பிய களங்கள் இதற்கு ஏற்றது. மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காய போட வேண்டும். இரவில் மிளகாய் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதாவைப் போட்டு மூடி வைக்கலாம். மிளகாய் வற்றல் சிவப்பு நிறமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். தவறான சேமிப்பு முறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் நல்ல விலைக்கு விற்க முடியாது. மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும் போது சாக்கு, பைகளை அமுக்க கூடாது. இதனால் வத்தல் உடைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகலாம். இவ்வாறு தெரிவித்தனர்.