மஞ்சூர், டிச.2: மஞ்சூர் அருகே பரளி மின்வாரிய குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பரளி. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் மின் நிலையம் உள்ளதால் மின்வாரிய அலுவலர் மற்றும் ஊழியிர்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மின்வாரிய பகுதியில் புகுந்தது.
தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானையை கண்டு அப்பகுதியினர் பீதி அடைந்து உடனடியாக வீடுகளுக்குள் சென்று கதவுகளை அடைத்து கொண்டனர். இந்நிலையில் சிறிது நேரம் அப்பகுதியிலேயே முகாமிட்ட காட்டு யானை பின்னர் அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது. மின்வாரிய குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


