ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 8: விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நீர்நிலைகளில் வசிக்கும் பறவை குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இதன்படி இந்தாண்டு கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்கள், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றில் வசிக்கும் பறவைகள் குறித்து கணக்கெடுக்கப்படும். இப்பணியில் அந்தந்த பகுதி வனத்துறை, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கேற்பர்.
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும். இதேபோல், தரைப்பகுதியில் வசிக்கும் பறைவைகள் கணக்கெடுப்பு 14, 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைப் பொறுத்தவரை மொட்டபத்தான் கண்மாய் பொன்னாங்கண்ணி கண்மாய், பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்க் குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது’ என்றனர்.


