Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நவீன வசதிகளுடன் கழிப்பறை பெட்டிகள்: மாநகரில் 25 இடங்களில் அமைக்க ஆலோசனை

திருச்சி, நவ.13: திருச்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், பொது சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில், தேவைப்படும் போது இடம் மாற்றி அமைக்கும் வகையிலான எஸ்.எஸ். ஸ்டீலினால் தயாரிக்கப்பட்ட நடமாடும் கழிப்பறைகள் (Movable Toilet) பரிட்சார்த்த முறையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய பஸ் நிலையம், ரயில் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், மெயின்கார்டுகேட், தெப்பக்குளம், காந்தி மார்க்கெட், பெரிய கடை வீதி உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பது பொது சுகாதாரத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்துவதாக உள்ளது. இங்கு சில பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கழிப்படங்கள் கட்டப்பட்டிருந்தாலும், அவற்றை மக்கள் முறையாக பயன்படுத்தாது மற்றும் பராமரிப்பு பணிகளில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றால் சுகாதார மேம்பாட்டு பணியில் பெரும் தொய்வு ஏற்படுகிறது. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் பல்வேறு நோய் தொற்று அபாயங்களுக்கும் வழி வகுப்பதாக உள்ளது. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் பெரிய அளவில் பயன் அளிப்பதில்லை.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி மாநகராட்சி ஒரு புதிய பரிட்சார்த்த திட்டத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பொது இடங்களில் கட்டப்படும் கழிவறைகள் காலப்போக்கில் சிதிலமடைந்து, பராமரிக்க முடியாத நிலைக்கு உருமாறுவதை தடுக்கவும், சுகாதார பணிகளை எளிதாக மேற்கொண்டு கழிப்பறையை எப்போதும் சுகாதாரமாக வைத்திருக்கும் வகையிலும், மாநகரப்பகுதிகளில் ஆங்காங்கே தென்படும் பெட்டிக்கடைகள் போன்ற அமைப்பு எஸ்.எஸ்.ஸ்டீல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க எஸ்.எஸ்.ஸ்டீலினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெட்டிகள், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நிறுவப்படவுள்ளது. இந்த பெட்டியின் மேல்புறத்தில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி முறையில் சிறுநீர் பேசின்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வகையில் உயரழுத்த மோட்டார்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒருவர் பயன்படுத்திய பிறகு தானாகவே தண்ணீர் திறக்கப்பட்டு கழிவறை சுத்தம் செய்யப்படும். மேலும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிரிமி நாசினிகள் கொண்டு சுகாதார பணிகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் காற்றோட்ட வசதியுடன் இருக்கும் என்பதால் துர்நாற்றம் உள்ளிட்ட சங்கடங்களும் தவிர்க்கப்படும். மேலும் இந்த பெட்டியிலுள்ள சிறப்பம்சம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் மாற்றிக்கொள்ளவும் முடியும்.

முழுக்க முழுக்க எஸ்.எஸ்.ஸ்டீல்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், கட்டிடங்களால் அமைக்கப்படும் கழிப்பறைகளில் ஏற்படுவது போன்று சிதிலமடைவது, டைல்ஸ்கள் பெயர்வது, பீங்கான்கள் உடைவது போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். ஒவ்வொரு பெட்டிகளும் ₹2.4 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பரிட்சார்த்த முறையில் முதல் கழிப்பறை பெட்டி திருச்சி பெரியகடை வீதி பைரவர் கோயில் அருகில் நிறுவப்படவுள்ளது. இதன் பயன்பாடு அடிப்படையில் மாநகரில் 25 இடங்களில் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.