Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யும்போது தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைத்தால் தமாகா முதலில் குரல் கொடுக்கும்: கடலூரில் ஜிகே வாசன் பேட்டி

கடலூர், மார்ச் 1:தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யும்போது தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைத்தால் தமாகா முதலில் குரல் கொடுக்கும் என்று கடலூரில் ஜி.கே.வாசன் கூறினார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பில் பேசுகிறோம். 1960 வேறு 2025 வேறு. தற்போது நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. இதற்கு காரணம் நம் மாணவர்களின் அறிவுத்திறன்தான். இது மேலும் சிறக்க உதவும் கல்விதான் புதிய கல்விக் கொள்கை. இதைப் பின்பற்றுவதால் நாட்டிற்கு நலமும், வளமும் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

இந்த கல்விக் கொள்கையில் ஒரு அங்கமாக மூன்று மொழி கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் முதல் மொழி அவரவரின் தாய்மொழி. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்மொழி, இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இரண்டாவதாக தொடர்பு மொழியாக உள்ளது ஆங்கிலம். மூன்றாவது மொழி என்பது செல்வந்தர்கள் மட்டும் பயின்ற 3வது மொழியை அனைத்து தரப்பினரும் கற்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய கல்வி கொள்கை.

இதன்மூலம் அனைத்து தரப்பினரும் மும்மொழி கொள்கையை கற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை. இதில் அரசியல் கூடாது. அனைத்து மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையில் சட்ட திட்டங்களை ஏற்று அதனை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர். இது தமிழகத்திற்கும் தேவை என்பதுதான் எங்களின் வேண்டுகோள். இதை 99.9சதவீத மாநிலங்கள் ஏற்றுள்ளது. இது தமிழகத்திற்கும் தெரிய வேண்டும்.

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தொகுதி மறு சீரமைப்பு பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் அப்படியொரு நிலை ஏற்பட்டால் பல்வேறு வரையறைகள் கோட்பாடுகள் உள்ளது.

அதன்படி தமிழகம் போன்ற மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் முதலில் குரல் கொடுக்கும். நாங்கள் தேர்தல் வகுப்பாளர்களை நம்பவில்லை, எங்கள் கொள்கையை நம்புகிறோம், மக்களை நம்புகிறோம். அதை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொள்வோம் இதுதான் எங்கள் பலம்.

தமிழக வெற்றி கழகத்தின் கெட்- அவுட் போன்ற திட்டங்கள் வாக்காளர்கள் முடிவு செய்வது. எங்கள் அரசியல் நிலைப்பாடு வேறு, அவர்கள் அரசியல் நிலைப்பாடு வேறு. மத்திய மாநில அரசுகளை பிடிக்கவில்லை என்பது விஜய்யின் கருத்து. நான் மத்திய அரசுடன் கூட்டணியில் உள்ளேன், மாநில அரசை எதிர்க்கிறேன், இது என் கருத்து. யார் தவறு செய்தாலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் அத்துமீறல் கூடாது, அதிகார துஷ்பிரயோகம் கூடாது, மிரட்டல் கூடாது. சட்டம் தன் கடமையை முறையாக செய்ய வேண்டுமே தவிர அதிகார வர்க்கத்தைக் கேட்டுக் கொண்டு செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.