Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா: ஆவடி காவல் ஆணையர் தகவல்

ஆவடி, அக். 29: தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைமறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ஆணையர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீபாவளியையொட்டி புத்தாடைகள், நகைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகள், மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதை கருத்தில்கொண்டு ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மார்கெட் பகுதிகள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்னையை கருத்தில்கொண்டு அதிகளவில் காவலர்களை நியமித்து கண்காணிக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய இடங்களில் போலீசாரால் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதை பாதுகாப்பாக உணரும் வகையிலும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், இரவு ரோந்து காவலை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சிரமம் இன்றி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வசதியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட முக்கிய பேருந்து நிலையங்களான பூந்தமல்லி, செங்குன்றம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.