திருவெறும்பூர், ஜன.30: திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அய்யம்பட்டி பகுதியில் இரண்டு வாலிபர்கள் பட்டாகத்தியுடன் சுற்றி தெரிவதுடன் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் தீப்பொறி பறக்கவிட்டு கொண்டிருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து சென்று பார்த்த பொழுது போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தமிழ் (எ) தமிழ்ச்செல்வன் (21) அவனை துவாக்குடி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவனை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


