அரவக்குறிச்சி, ஜன. 25: தார்ப்பாய் இல்லாமல் சென்றால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவை அருகில் உள்ள கிரஷரில் இருந்து எடுத்து வரப்போகிறது. இந்த லாரிகள் வேகமாக செல்லும்போது மணல், ஜல்லிகள் ஆகியவற்றின் துகள்கள் பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் லாரியின் மேல் தார்ப்பாய் கொண்டு மூடிச்செல்ல வேண்டும். இதனை லாரி ஓட்டுநர்கள் சிறு துளியும் மதிப்பதில்லை. அரவக்குறிச்சியில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் எவ்வித அச்சமுமின்றி லாரி ஓட்டுநர்கள் செயல்படுகின்றனர். எனவே மணல், ஜல்லிகற்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச்செல்லும் டிராக்டர்கள், லாரிகள், தார்பாயால் மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


