ஈரோடு, ஜன.12: ஈரோடு முனிசிபல் காலனி, அப்பன் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (32). ஜவுளி உற்பத்தி செய்வதற்கான துணிகளை மடித்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரிடம் 2 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்குள்ளான அருண்குமார், அவ்வப்போது மது குடித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, மனைவி நந்தினி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர். தொடர்ந்து 9ம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் நந்தினி எழுந்து பார்த்தபோது, அருண்குமாரை காணவில்லை. இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவரது மனைவி நந்தினி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருண்குமாரை தேடி வருகின்றனர்.


