கரூர், ஜன. 9: ஒரு சிலரால் வேட்டையாடப்பட்டு வரும் அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட பகுதியை தொடும் கடவூர் பகுதிதான் வனப்பகுதியாக உள்ளது. மற்ற பகுதிகள் செடி கொடிகள் படர்ந்த நிலையில்தான் உள்ளன.கரூர்-திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கீரி, உடும்பு, முயல் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி பறவை இனங்களாக, காடை, கவுதாரி போன்ற பறவைகளும் அதிகளவு உள்ளன.
வார நாட்களில் இதுபோன்ற உயிரினங்களை கன்னி வைத்து பிடித்து, அதனை விற்பனை செய்யும் கும்பல் கருர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமானோர் உள்ளனர். வாரந்தோறும் இதுபோன்றவர்களில் சிலர், கன்னிகளை கொண்டு சென்று, குடியிருப்பு அல்லாத பகுதிகளில் கன்னி வைத்து, கீரி, உடும்பு போன்றவற்றை பிடித்து நகரப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி பறவையினங்களையும் இதுபோன்றவர்கள் குறி வைத்து பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். பறவை மற்றும் அரிய வகை விலங்குகளை மாநகர பகுதிகளில் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்காட்டு விலங்குகள் மற்றும் பறவையினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டுமென பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


