நெல்லிக்குப்பம், அக். 23: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பகுதியில் புகழ்வாய்ந்த சொக்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கான வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரைத்தளம் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று பள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமியின் மூலவர் கோயில் அர்த்தமண்டபம் பகுதியில் பழைய சிமெண்ட் தரையை உடைத்து கருங்கற்களால் தரை அமைக்கும் பணி நடந்தது.
அப்போது படிக் கட்டின் பக்கத்தில் தரையை உடைத்தபோது கருங்கற்கல் சத்தம் கேட்டது. அந்த இடத்தை தூய்மை செய்து பார்த்தபோது கருங்கட்களின் கீழ் அறையும், அறையை சுற்றி படிக்கட்டுகளும் இருந்தது. சுரங்கப்பாதை இருக்குமோ என உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் உத்தரவின்பேரில் அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி சக்திவேல், தொல்லியல் ஆலோசகர் இளஞ்செழியன் ஆகியோர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை ஆய்வு செய்தனர். ஆய்வில் கோயில் சுரங்க அரை 5 அடி ஆழமும் 11க்கு 6 அடி கொண்ட சிறிய அறை இருந்தது தெரிய வந்தது.


