பள்ளிகொண்டா, டிச.9: பள்ளிகொண்டாவில் 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் ஷூ கம்பெனியில் கடந்த ஜூன் மாதம் முதல் வேலை செய்து வருகிறார். அப்போது, ஆம்பூர் சுகர்மில் பகுதியை சேர்ந்த வினோத்(22) என்பவர் சிறுமிக்கு பழக்கமாகி பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி வழக்கம்போல் ஷூ கம்பெனிக்கு செல்வதற்காக பள்ளிகொண்டா பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிறுமியிடம், வாலிபர் வினோத் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், மைசூரில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டு, வினோத் ஒருமாதம் அங்கேயே தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை வினோத் அந்த சிறுமியுடன் அவரது சொந்த ஊரான சுகர்மில் கிராமத்திற்கு வந்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிறுமியுடன் இருந்த வினோத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


