தியாகதுருகம், பிப். 7: தியாகதுருகம் அருகே திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதாக தியாகதுருகம் காவல் ஆய்வாளர் மலர்விழிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தார். அப்போது முக்குளம் அருகே திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த கூத்தான் மகன் வேலாயுதம் (41) என்பவரது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வேலாயுதத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. வேலாயுதம் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் கைதானது தெரியவந்தது. அவர் மீது சென்னை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து வேலாயுதத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


