பாடாலூர், மார்ச் 25: கூத்தனூர் கிராமத்தில் இருந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழாவிற்கு பூக்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி விமரிசையாக நேற்று முன்தினம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், கூத்தனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சிக்கு பூங்கள் கொண்டு செல்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் நேற்று முன்தினம் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
பின்பு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் பூச்சொரிதல் வீதி உலா மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதிஉலா நடைபெற்றது. வீதி உலாவின் போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்தனர். இறுதியாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு டிராக்டர் மூலம் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூத்தனூர் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.


