குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்வு பாதுகாப்பு கருதி தண்ணீர் திறப்பு செங்கத்தில் பெய்த தொடர் மழையால்
செங்கம், அக்.11: செங்கம் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையானது 59 அடி உயரம் கொண்டது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது. இந்நிலையில், செங்கம் பகுதியில் பெய்த தொடர் மழையால் குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் தற்போது 54 அடியாக உயர்ந்துள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று உதவி பொறியாளர் ஹரிஹரன் தலைமையிலான அதிகாரிகள் அணைக்கு வரும் 110 கனஅடி தண்ணீரை அப்படியே செய்யாற்றில் திறந்து வைத்தனர். வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்ப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும், மழையால் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்படும் எனவும், ெசய்யாற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


