தண்டராம்பட்டு, பிப்.2: தண்டராம்பட்டு அருகே குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் கட்டையால் அடித்து விவசாயியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த புதூர் செக்கடி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்பு ஓடை பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (36). கடந்த 28ம் தேதி குடித்துவிட்டு அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளிடமும், நடந்து செல்பவர்களிடமும் வீண் தகராறு செய்து கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள்(38), ராமராஜிடம் ஏன் இப்படி குடித்துவிட்டு தகராறு செய்கிறாய்? என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், தகராறு முற்றியதில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில், படுகாயம் அடைந்த பெருமாளை அப்பகுதியினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருமாள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள் மகன் மணிகண்டன் தானிப்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் கொலை வழக்குப்பதிவு செய்து ராமராஜை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தார். குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


