கழுகுமலை, நவ. 8: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் அரோகரா கோஷம் முழங்க சுவாமி, சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசித்திப் பெற்ற குடைவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 5ம் திருநாளான நேற்று முன்தினம் தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6.30 மணிக்கு பூஞ்சப்பரத்தில் சுவாமி கழுகாசலமூர்த்தி எழுந்தருளி வீதியுலா நடந்தது. காலை 9 மணிக்கு சஷ்டி விரதமிருந்து வரும் பக்தர்கள் கோயில் மேலவாசலில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.
மதியம் 12 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை வழிபாடு நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் சென்றார். இரவு 7 மணிக்கு கோயில் தெற்குவாசல் முன்பு வெற்றிவேல் வீரவேல் கோஷங்கள் முழங்க தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோரை கழுகாசலமூர்த்தி சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கயத்தார் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், பாஜ மாவட்ட செயலாளர் சென்னகேசவன், கயத்தார் மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஷ்குமார், ஆர்எம்ஆர் ரமேஷ் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, ஜீ.வி ஆயில் மில் முத்து உள்பட பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வரும் 10ம் தேதி இரவு 7.35 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை செண்பகராமபட்டர், ரகு பட்டர் ஆகியோர் செய்தனர்.
மாலை 6 மணிக்கு கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் திருவீதியுலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோயில் பின்புறமுள்ள காந்தி மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. கஜமுகாசூரன், தாரகாசூரன், பானுகோபன், சிங்க முகாசூரன், சூர பத்மனை சண்முகர் வதம் செய்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார்பு நீதிபதி மாரிக்காளை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதி ராஜா, நிருத்தியலட்சுமி, ரவீந்திரன், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைபிரியா, வக்கீல் சங்க தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


