கடலூர், மார்ச் 15: கடலூர் முதுநகர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோர கடையில் மோதி தீ பிடித்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 5 வாகனங்கள், 6 கடைகளும் எரிந்து சேதமடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. லாரி கடலூர் முதுநகர் அருகே சுத்துக்குளம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலை ஓரத்தில் இருந்த கடை மீது மோதியது. இதனால் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட லாரி என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த விபத்தில் டிரைவர் கங்காதரன், அருகில் இருந்த கடையில் வேலை செய்த சூர்யா உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து லாரி கொழுந்துவிட்டு எரிந்ததால் மேலும் 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இருப்பினும் லாரி தீயில் எரிந்து சேதமானது.
மேலும் லாரி அருகில் நின்றிருந்த 2 மினி டெம்போ, 3 பைக், 6 கடைகள் எரிந்த சேதமாகின. டேங்கர் லாரி எரிந்தபோது அங்கிருந்து மின்சார ஒயர்களும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகிலும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நள்ளிரவு சம்பவ இடத்துக்கு வந்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் லாரியை அங்கிருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினரிடம் கேட்டுக்கொண்டார். சுத்துக்குளம் அருகே கடலூர்- சிதம்பரம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாததால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில் லாரியில் மீதம் இருந்த கச்சா எண்ணெய் மற்றொரு டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. லாரி தீ பிடிக்காமல் இருக்க கச்சா எண்ணெய் மாற்றும்போது அந்த டேங்கர் லாரி மீது தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கச்சா எண்ணெய் லாரி விபத்தில் சிக்கிய சம்பவம் கடலூர் முதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


