அன்னூர்,பிப்.5: கோவில்பாளையம் அருகே காபிக்கடை பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்த சுந்தர் என்பவர் தோசை பார்சல் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் கடை நேரம் முடிந்து விட்டது. கடையை சாத்துகிறோம் எனக் கூறியுள்ளனர். இருப்பினும் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்சல் செய்து தருமாறு சுந்தர் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் சட்னி இல்லை, தோசை மட்டுமே உள்ளது எனக் கூறி பார்சல் செய்வதற்கு தாமதம் செய்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் சுந்தரத்தை தாக்கியுள்ளனர். இதனால் சுந்தர், தனது நண்பர்களான ஸ்ரீதர், குணா ஆகியோரை வரவழைத்து கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இதில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் திருப்பி தாக்கியதில் சுந்தர் கை உடைந்தது, ஸ்ரீதர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து ஓட்டல் உரிமையாளர் பாண்டித்துரை (32), சந்தோஷ் குமார் (26), தினகரன் (25), விமல் குமார் (25), சரவணன் (33), கருப்பையா (34) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சுந்தர் மற்றும் குணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


