ஊட்டி, ஜன. 22: ஊட்டியில் இருந்து இடுஹட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆபத்தான சீகை மரங்களை அகற்ற பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டியில் இருந்து இடுஹட்டி சாலையில் கோடப்பமந்து முதல் சின்கேனா வரையில் சாலையோரங்களில் ஏராளமான சீகை மரங்கள் வளர்ந்துள்ளன. இவைகள் சாலையில் தொங்கி கொண்டிருக்கின்றன. இந்த சீகை மரங்களால் சாலையில் நிழல் விழுவதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள் செல்லும் போது வாகனங்களில் பட்டு காய்கறி மூட்டைகள் பாதிப்படைகிறது.
அதேபோல், அரசு பஸ்கள் மீது மோதுவதால் சில சமயங்களில் கண்ணாடிகள் உடைகிறது. மேலும், இந்த மரங்களில் இருந்து விழும் தண்ணீர் மற்றும் நிழல் காரணமாக சாலை விரைவில் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் வளர்ந்து தொங்கும் சீகை மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


