கரூர், செப். 30: உலக இருதய தினத்தை முன்னிட்டு கரூர் தான்தோன்றி மலை பழைய எஸ்பி ஆபிஸ் அருகில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் இருதய நல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமினை கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் சங்கத் தலைவி கலைச்செல்வி கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதில், டாக்டர்கள் ரகுபதி, மணிவண்ணன், அகத்யா, நிவேதா ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி கூறினர். முகாமில், ஊட்டச்சத்து நிபுணர் வசுமதி பொதுமக்களிடம் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை பற்றியும், பின்பற்ற வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி எடுத்து கூறினார்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இ.சி.சி. (ECE) ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்ததுடன், வரும் அக்டோபர் மாதம் 5 தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் ராயனூர், காந்திகிராமம், தான்தோன்றி மலை ஆகிய பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.


