உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தால் வளம் பெறும் தமிழகம் பொதுமக்கள் மகிழ்ச்சி ₹1756.57 கோடியில் 246 பணிகள் முடிவடைந்துள்ளது
கலசப்பாக்கம், பிப்.6: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வதால் தமிழகம் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தார். மேலும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 10 கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கினர். இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு, பணிகளை தேர்வு செய்யும் குழு, அனுமதி வழங்கிடும் உயர்நிலைக்குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டது.
கலெக்டர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 1269 பணிகள் ₹14,524.18 கோடி மதிப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு 246 பணிகள் ₹1756.57 கோடி மதிப்பில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், 665 பணிகள் ₹10404.98 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. 358 பணிகள் ₹2362.62 கோடி மதிப்பில் மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம், சிறுபாலம் புனரமைத்தல், தடுப்பணைகள், அணைக்கட்டுகள், சமுதாயக்கூடம், தரைமட்ட பாலம், நீர்வரத்து கால்வாய்கள், தொகுதியில் பல ஆண்டு காலமாக நிறைவேற்றப்படாத பணிகள் இத்திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்றப்படுவதால் கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெற்று வருகிறது. மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. அதேபோல் பொதுமக்கள் மனமகிழும் விதத்தில் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படுவதால் தமிழகம் வளம் பெற்று வருகிறது.


