Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் வண்டலூர் தாசில்தார் இடமாற்றம்

கூடுவாஞ்சேரி, ஜூன் 11: இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்வதாக அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். அதன் எதிரொலியாக வண்டலூர் தாசில்தார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் மாம்பாக்கம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய மூன்று குறு வட்டங்கள் உள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியும் அடங்கும். இதில், கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக புஷ்பலதா பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்வதாக கூறி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், குறு-சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான த.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் ஆகியோரிடம் திமுக ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டருக்கு நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்கொடி வண்டலூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகையில், ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய வண்டலூர் வட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காமல் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இலவச வீட்டுமனை பட்டா பயனாளிகளை அழைத்து வந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி செங்கல்பட்டில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், வண்டலூர் வட்டத்தில் அடங்கிய பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனை அடுத்து வண்டலூர் தாசில்தார் அரசு சட்டவிதிகளின்படி கணக்கெடுப்பு நடத்தி சர்வே செய்த பின்னரே இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகவும், இதில் தமிழக முதல்வர் கூறியபடி இன்னும் ஆறு மாத காலமே இருப்பதால் அதற்குள் தமிழக சட்டமன்றம் தேதி அறிவித்துவிட்டால் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள். இதனால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே இதுபோன்று எதிர்க்கட்சியினருக்கு சாதகமாக மெத்தனப்போக்கில் செயல்படும் வண்டலூர் தாசில்தாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் வலியுறுத்தினோம். அதன் எதிரொலியாக வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா நெடுஞ்சாலை துறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்’ என்றனர்.