Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆன்லைனில் பணம் பறித்த கேரளா வாலிபர் கைது; ேலான் ஆப் மூலம் மோசடி செய்த ₹331 கோடி முடக்கம்: கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு

புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (40) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு உடனடி கடன் பெறவேண்டி, செல்போனில் ஒரு உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து, அதன் மூலம் ₹10 ஆயிரம் பணம் வாங்கினார். அவர் வாங்கிய ₹10 ஆயிரம் கடனிற்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரிடமிருந்து ₹2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர். இருப்பினும், புகார்தாரரை, விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பாளர்கள் அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர். இதுகுறித்து ஆண்ட்ரூஸ் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதுசம்பந்தமாக 2023ம் ஆண்டு ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் கடந்த 2 ஆண்டுகளில் 230க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும், வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-ஆப் விவரங்கள், டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்? யார்? பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர்,

பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 14 நபர்கள் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா உத்தரவின்படி தீவிர விசாரணை நடத்தப்பட்டு பல்வேறு கூடுதல் தகவல்கள் திரட்டப்பட்டது. பின்னர், எஸ்.பி. பாஸ்கர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில், உதவி ஆய்வாளர் சந்தோஷ், தலைமை காவலர் மணிமொழி, காவலர்களான ஜலாலுதீன், ரோஸ்லின்மேரி, பாலாஜி, அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த விசாரணையில், முதலாவது குற்றவாளியாக கேரளா, மலப்புரம் பகுதியை சேர்ந்த குவாரி லாரி டிரைவரான முகமது ஷபி (37) என்பவர் அடையாளம் காணப்பட்டு நேற்று கேரளா, எர்ணாகுளத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை புதுவை சைபர் கிரைம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ₹10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பணம் முடக்கப்பட்டது.

மேலும் அவரிடம் தொடர்புடைய 14 நபர்களின் வங்கி கணக்குகள் அனைத்தும் சேர்த்து ₹300 கோடிகள் மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தெரியவந்தது. முகமது ஷபியின் லோன் ஆப் ஐடியை சோதனை செய்தபோது கம்போடியா நாட்டில் இருந்து தமிழர்கள் மூலம் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி பணங்கள் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. முகமது ஷபியின் கூட்டாளி முஜி என்பவர் சென்னையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு சம்பந்தமாக அடுத்தடுத்து வருகின்ற குற்றவாளிகளை பிடித்தால் அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரியவரும். கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கொண்டு நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு லோன் ஆப்களை தொடங்கி முகமது ஷபி போன்று பலரை வைத்து பொதுமக்களிடம் இருந்து பணம் பறித்தது சித்தன் முகேஷ் என்பது தெரியவந்தது. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈடி கைது செய்து அவரின் பல்வேறு ஆன்லைன் லோன் ஆப்கள் மற்றும் ₹331 கோடி பணம் ஆகியவற்றை முடக்கியது தெரியவந்தது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்ட சித்தன் முகேஷ் ஈடியால் ைகது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகளான ஷெரிப் மற்றும் நஷிப் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் இவ்வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சித்தன் முகேஷின் கீழ் டெல்லி, ராஜஸ்தான், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் முகமது ஷபி போன்று ஆட்கள் வேலை செய்கின்றனர்.

இவர்கள் வாங்கும் பணம் அனைத்தும் சித்தன் முகேஷின் மூலமாகவே வெளிநாடுகளுக்கு கிரிப்ேடா கரன்சியாக செல்கிறது என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷபியை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா கூறுகையில், புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்று ஏமாற்றம் அடைந்ததாக கடந்தாண்டு 336 புகார்கள் வந்தது. அதனடிப்படையில் 100 கடன் ஆப்கள் முடக்கப்பட்டது. இதுபோன்ற கடன் ஆப்கள் மூலமாக தொடர்பு கொள்பவர்கள் பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து தமிழர்களை வைத்து பேசி மோசடி செய்கின்றனர். வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறி வெளிநாடுகளுக்கு வரவழைத்து அவர்களை மிரட்டி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

இமைக்கா நொடிகள் சினிமா படத்தில் வருவது போன்று ஒரு இடத்தில் இருந்து கொண்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து பேசுவது போல் சிக்னல்களை அமைத்து போலீசாரை திசை திருப்பி வருகின்றனர். ஆகையால் புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் விவரங்கள், அவர்கள் எங்கு வேலை செய்கின்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதுவரையில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உண்மையாகவே வேலை செய்கின்றனர். சிலர் சுற்றுலா சென்று மீண்டும் புதுவைக்கு திரும்பியுள்ளனர். மேலும் இதுசம்பந்தமாக விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் செல்போனில் வருகின்ற உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்கிய அனைத்து நபர்களுமே அவர்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டப்படுகின்றனர்.

மேலும், அந்த மார்பிங் செய்த புகைப்படங்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பல மடங்கு அதிகமாக பணம் பறிக்கப்படுவது இணையவழி மோசடிகாரர்களின் வேலையாகும். ஆகவே பொதுமக்கள், உடனடி லோன் ஆப்-பில் இருந்து கடன் வாங்க வேண்டாம் என இணைய வழி காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. மேலும், இதுபோன்று புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் என அறிவுறுத்தினார்.