கும்மிடிப்பூண்டி, மார்ச் 24: ஆந்திராவுக்கு சுற்றுலா சென்றபோது, கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ் (26). இவர் தனது தங்கை ஆலியா பேகம் (20), மற்றும் நண்பர்கள் சம்ரீன் (20), தீனா (21), ஸ்ரீமான் (22), யோகேஸ்வரன் (20), மாதேஷ் (21) மற்றும் பெஞ்சமின் (26) ஆகியோருடன் ஒரே காரில் ஆந்திர மாநிலம் தடா நீர் வீழ்ச்சிக்கு சென்னையில் இருந்து நேற்று சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
காரை முகமது ஆவேஷ் ஓட்டிச் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான பெரியவேடு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவியான சம்ரீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் எளாவூர் சோதனைச் சாவடியில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநிலம் தடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


