ஏரல், ஜூலை 22: வைகுண்டம் வடகால் பாசனப்பகுதியில் கருகி வரும் வாழைகளை காப்பாற்றிட வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி ஜூலை 26ம் தேதி ஏரல் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திட பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைகுண்டம் வடகால் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கன்வீனர் நம்பிராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வடகால் பாசனத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்துள்ள வாழைகள் தண்ணீரின்றி கருகி வருவதை காப்பாற்றிட வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி திருநெல்வேலி தாமிரபரணி செயற்பொறியாளரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்து முறையிட்டும் இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் கருகி வரும் வாழைகளை காப்பாற்றிட வை.
வடகால் வாய்க்காலில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டி ஜூலை 26ம் தேதி ஏரல் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் தலைவர்கள் சேர்வைகாரன்மடம் லிங்கத்துரை, தனுஷ்கோடி, ஆறுமுகமங்கலம் சுப்புத்துரை, கூட்டாம்புளி பட்டு முருகேசன், முக்காணி சின்னதம்பி மற்றும் லெட்சுமிபுரம் ராஜாராம், மாரமங்கலம் மிக்கேல், கனபதிசமுத்திரம் கனிராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய தலைவர் பொன்ராஜ், பெஸ்டி உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.