வைகுண்டம், மே 24: வைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் ரூ.20 லட்சத்தில் நவீன வசதிகளுடன் சலவைக்கூடம் புதுப்பிப்பு பணிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பராங்குசநல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட இடத்தில் சலவைக்கூடம் செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கூடத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல் சலவை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இங்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது இப்பகுதியில் வை. பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியை நேரில் பார்வையிட்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கி சலவைக்கூடத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று சலவைக்கூடம் புதுப்பிப்பு பணிகளுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது சலவை தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்து தங்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவியாக சலவைக்கூடம் புதுப்பிப்பு பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, பிடிஓ சிவராஜன், காங். மாவட்ட பொதுச்செயலாளர்கள் எடிசன், அலங்கார பாண்டியன், சீனி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தாசன், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், நகர தலைவர் கருப்பசாமி, ஐஎன்டியுசி சந்திரன், வட்டார செயலாளர் நிலமுடையான், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் இசக்கிராஜா மற்றும் பாண்டியன், மாசானமுத்து, பிச்சைக்கண்ணு, ராமச்சந்திரன், பஞ்சவர்ணம், சந்தியா, இசக்கிசெல்வி, மதிசேகரன், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.