வைகுண்டம், ஆக. 20: வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்தவர் விவசாயி கோபால் (72). கோபாலின் வயலும், தோழப்பன்பண்ணையை சேர்ந்த இசக்கி என்பவரது வயலும் அருகருகே உள்ளது. இந்நிலையில் கோபால் வளர்ந்து வந்த ஆடுகள், இசக்கி வயலில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி, ஆட்டை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோபால் மகன் பேச்சிமுத்து, இசக்கி வீட்டிற்கு சென்று ஆட்டை மீட்டு வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த இசக்கி, தோழப்பன்பண்ணை ரமேஷ் (28), உலகநாதன் (25), பாதாளம் (45) ஆகியோர் சேர்ந்து கடந்த 11ம் தேதி பேச்சிமுத்துவை தேடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த கோபாலை முகத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி கோபால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வை.இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்கு பதிந்து ரமேஷ், இசக்கி, உலகநாதன், பாதாளம் ஆகிய 4 பேரை கைது செய்தார். இதனிடையே தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறார்.