சேலம், ஜூன் 7: சேலம் மாவட்டத்தில் ₹7 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 28 நகர்புற நலவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், பல்வேறு புதிய மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வியும், சுகாதாரமும் அரசின் இரு கண்கள் என அறிவித்துள்ள முதல்வர், அதற்கான கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்தவகையில், தமிழக மக்களின் சுகாதார தேவைகளை மென்மேலும் மேம்படுத்தும் விதமாக, கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், மாநிலம் முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ₹25 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, ₹7 கோடி மதிப்பில், மாவட்டம் முழுவதும் 28 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பொன்னாம்மாபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட, வாய்க்கால்பட்டறை நலவாழ்வு மையத்தை முதல்வர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், டிஆர்ஓ மேனகா, மேயர் ராமச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் சேலம் சவுண்டம்மாள், ஆத்தூர் ஜெமினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பின்படி சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், மேட்டூர் மற்றும் இடைப்பாடி நகராட்சிகளில் தலா ஒரு நலவாழ்வு மையமும், மாநகராட்சி பகுதிகளில் 25 நலவாழ்வு மையமும் என மொத்தம் 28 மையங்கள், ₹7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நகர்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு தூய்மை பணியாளர் என மொத்தம் 112 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நலவாழ்வு மையத்திற்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும், சுமார் 20,000 முதல் 25,000 வரை உள்ள மக்களுக்கு, நாள்தோறும் காலை 8 மணிமுதல் 12 மணிவரை மற்றும் மாலை 4 மணிமுதல் 8 மணி வரையிலும், 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை \”அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்\” கீழ் வழங்குவார்கள்.
இந்த நகர்புற நலவாழ்வு மையங்களின் மூலம், மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர்இளம் பருவத்திற்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நலசேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மன நலசேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் வழங்கப்படும். நகர்புற மக்கள் குறிப்பாக குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்கள் தரமான முறையில் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நகர்புற நலவாழ்வு மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்படும்.
அனைத்து அத்தியாவசியமான ஆரம்ப சுகாதார சேவைகளை மக்கள் எவ்வித பொருட்செலவின்றி, அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதோடு மட்டுமின்றி, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை, மக்கள் தேவையின்றி அணுகும் சூழ்நிலையும் நீக்குகின்றது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளர் (பொ) அசோக்குமார், மாநகர் நல அலுவலர் யோகானந்த், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள், கண்காணிப்பு பொறியாளர் ரவி, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.