*வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியது
திருமலை : சென்னை வழியாக ஆந்திராவுக்கு இலங்கை, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹6.4 கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாய் மற்றும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு சென்னை வழியாக ஆந்திராவிற்கு கடத்தி செல்வதாக விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், விஜயவாடா பொல்லப்பள்ளி சோதனை சாவடி அருகே அதிகாரிகள் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4.3 கிலோ தங்கம், 6.8 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து கார் ஓட்டி வந்தவர் கைது செய்தனர். மொத்தம் காரில் இருந்த ₹6.4 கோடி மதிப்புள்ள 11.1 கிலோ தங்கம் மற்றும் இந்திய மதிப்பில் ₹1.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டவரை விசாகப்பட்டினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விஜயவாடா சுங்கத்துறை ஆணையர் அலுவலக எல்லைக்குள் 2 ஆண்டுகளில் சுமார் ₹40 கோடி மதிப்புள்ள 70 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.