கண்ணமங்கலம், ஜூன் 14: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தர்கள் ₹52 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. பலரது குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். அப்போது, பக்தர்கள் ஏராளமானோர் பொங்கலிட்டு தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள 7 உண்டியல்களை, 3 மாதத்திற்கு ஒருமுறை திறந்து காணிக்கைகள் எண்ணுவது வழக்கம்.
அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டது. திருவண்ணாமலை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில், போளூர் சரக ஆய்வர் ராகவேந்தர், செயல் அலுவலர் சங்கர், கண்காணிப்பாளர் ஆறுமுகம், மேலாளர் மகாதேவன், எழுத்தர்கள் சீனிவாசன், மோகன், மற்றும் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ₹52 லட்சத்து 57 ஆயிரத்து 670 காணிக்கையாக கிடைத்தது. அதே போல் தங்கம் 645 கிராம், வெள்ளி 1040 கிராம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். கோடை விடுமுறை காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் இந்த மாதம் வரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உண்டியல் காணிக்கை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.