சேலம், ஆக.12: ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹50 கோடி மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் 5.76 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. அந்த நிலத்தை மீட்டு கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல உதவிஆணையர் ராஜா தலைமையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், மின்வாரியம், தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புதாரர்களை அகற்றினர். பின்னர் அந்த நிலத்தை அதிகாரிகள் கோயில் வசம் ஒப்படைத்தனர். இந்நிலம் சிக்கம்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமானது. இதை அன்னியர்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. சுவாதீனம் எடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹50 கோடி என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.