தர்மபுரி, ஜூலை 28: தர்மபுரி அருகே 90 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், இலக்கியம்பட்டி இபி ஆபீஸ் இறக்கம்-முக்கல்நாயக்கன்பட்டி சாலையில் ₹4 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக 4 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. தர்மபுரி-சேலம் மெயின்ரோடு (என்.ஹெச்-7) கலெக்டர் அலுவலகம் அருகே பிரிந்து, இலக்கியம்பட்டி இபி ஆபீஸ், ராமன் நகர், ஏமகுட்டியூர், முக்கல்நாயக்கன்பட்டி மற்றும் வத்தல் மலை அடிவாரம் வரை செல்கிறது. இந்த சாலையை நேரு நகர், ராமன் நகர், ஏமகுட்டியூர், உங்காரன அள்ளி, வெங்கட்டம்பட்டி, மாதேமங்கலம், தம்மணம்பட்டி, மிட்டாரெட்டி அள்ளி, தின்னஅள்ளி, எட்டிமரத்துப்பட்டி, நூலஅள்ளி, முக்கல்நாயக்கனஅள்ளி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இலக்கியம்பட்டி இபி ஆபீஸ் – முக்கல்நாயக்கன்பட்டி வரை ஒருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் வத்தல்மலைக்கு செல்லவேண்டும். வத்தல்மலையை சுற்றுலா தளமாக அரசு அறிவித்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. விடுமுறை நாட்களில் பயணிகள் வத்தல்மலைக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றனர். பஸ், லாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
எதிரே இரு பஸ்கள் வந்தால், வழிவிட்டு செல்லக்கூட போதுமான சாலை கிடையாது. கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 24 மணி நேரமும் வாகனங்கள் இச்சாலையில் இயங்குகின்றன. குறுகலான ஒருவழிச்சாலை என்பதால், சாலையோரம் செல்லும் கால்வாய்க்குள் வாகனங்கள் பாய்வதும், சரிந்து விழுவதும் வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் நடக்கும் இந்த சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கை, தற்போது நிறைவேறியுள்ளது. ஒருவழிச்சாலையை, இடைவெளி சாலையாக மாற்ற, ₹4 கோடி நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 3.75 மீட்டர் அகல சாலை, தற்போது 5.30 மீட்டர் அகலமாக விரிவுப்படுத்தப் படுகிறது. கடந்த மாதம் பூமி பூஜையுடன் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியது.
முன்னதாக சாலையின் ஒரு புறம் மட்டும் அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இலக்கியம்பட்டி இபி ஆபீஸ் முதல் 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை முதல்கட்டமாக அகலப்படுத்தப்படுகிறது. ராமன்நகர் அருகே இச்சாலையில் 4 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர், 2வது கட்ட சாலை அமைக்கும் பணி விடுப்பட்ட இடங்களில் இருந்து தொடங்கும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி-சேலம் மெயின் ரோடு முக்கல்நாயக்கன்பட்டி சாலையில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தற்போது ₹4 கோடி மதிப்பீட்டில் 5.30 மீட்டர் அகலத்தில் ஒருவழிச்சாலை, இடைவெளிச் சாலையாக மாற்றி அமைக்கப்படுகிறது. ஒரு புறம் மட்டும் தான் சாலை அகலப் படுத்தப்படுகிறது. சாலை விபத்துக்கள் மற்றும் நெரிசலை தவிர்க்க, இந்த சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு கூடுதல் நிதி பெற்று, விடுபட்ட இடத்தில் இருந்து, கூடுதலாக சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் 7.30 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். வத்தல்மலை சுற்றுலா தளத்திற்கு பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் சாலை அகலப்படுத்தப்படும்,’ என்றனர்.