தர்மபுரி, மே 16: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2008ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 500 படுக்கை வசதிகளுடன் 5 மாடி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது 1200 படுக்கை வசதி உள்ளது. அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்து, தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிக்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சை வார்டு, பிரசவம், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால், ரத்த சுத்திகரிப்பு பிரிவு மட்டும் இல்லை. இதனால், நோயாளிகள் சேலம் அல்லது பெங்களூருவுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு, சர்க்கரை நோயாளிகள் தினசரி 130 முதல் 150 பேர் வரை சுழற்சி முறையில் பரிசோதனைக்கு வருகின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்கு 2 சிறுநீரகமும் பழுதடைந்தால், ரத்தத்தை சுத்திகரித்து மீண்டும் உடலில் செலுத்த, டயாலிசிஸ் கருவி (ரத்தம் சுத்திகரிப்பு) தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு தேவைப்பட்டது. நோயாளிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட்டது. தற்போது 8 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. ஒரு கருவியில் மனித உடலில் இருந்து ரத்தத்தை சுத்திகரித்து, மீண்டும் உடலுக்குள் செலுத்த குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகிறது. இதனால், ஒருநாளைக்கு 15 பேருக்கு மட்டுமே ரத்தம் சுத்தகரிக்கப்படுகிறது. தற்போது கிட்னி பாதிக்கப்பட்ட நோயாளிகள் ரத்தம் சுத்திகரிப்பு செய்ய சேலம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்ல வேண்டிய நிலை இல்லை. ஒருநோயாளிக்கு வாரத்திற்கு 2 முறை ரத்தம் சுத்திகரிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலையுடன், கிட்னி பாதிப்புள்ள (ஹெபடைட்டிஸ்) நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இப்பிரச்னைகளை தீர்க்கும் வகையில், நேற்று மஞ்சள் காமாலையுடன், கிட்னி பிரச்னை (ஹெபடைட்டிஸ்) நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய தனி இயந்திரம் அமைக்கப்பட்டு, ₹35 லட்சத்தில் புதிய டயாலிசிஸ் தனிப்பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி இப்பிரிவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி, மருத்துவத்துறை பேராசிரியர்கள் கலைச்செழியன், சந்திரசேகர், குமார் ராஜா, ஆனந்தி, சசிகுமார், சுரேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஹெபடைட்டிஸ் (மஞ்சள் காமாலை) நோயாளிகளுக்கான பிரத்யேகமான புதிய டயாலிசிஸ் பிரிவு ₹35 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் தினசரி சுமார் 55 சிறுநீரக கோளாறு நோயாளிகள் வருகின்றனர். 500 நோயாளிகள் சுழற்சி முறையில், ஒரு மாதத்திற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வருகின்றனர். தற்போது ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான டயாலிசிஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இனி அனைத்து தரப்பினருக்கும் டயாலிசிஸ் செய்யலாம்,’ என்றார்.