கே.வி.குப்பம், நவ.6: கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு பாலாற்றில் ₹12 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
கே.வி.குப்பம் தாலுகா முடினாம்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே திருவலம் காட்பாடி வெங்கடகிரி கோட்டா சாலை மற்றும் செதுவாலை விரிஞ்சிபுரம் சாலைக்கு இடையே ₹12 கோடி மதிப்பில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலப் பணிகளை கலெக்டர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பாலமானது 137.20 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் கட்டப்படவுள்ளது. இப்பாலம் கட்டப்படுவதன் மூலம் வாழ்வாங்குன்றம், விரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், லப்பை கிருஷ்ணாபுரம், செதுவலை மற்றும் முடினாம்பட்டு ஆகிய கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள். குறிப்பாக மழை காலங்களில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும்போது, இந்த குறிப்பிட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் ஆற்றை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களிடம் உயர்மட்ட பாலத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வேப்பங்கனேரி ஊராட்சியில் நடைபெற்று வரும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் காலை முதல் பரிசோதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் எவருக்கேனும் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சென்னங்குப்பம் கிராமத்தில் வேளாண்மை துறையின் மானாவரி மேம்பாட்டு பகுதி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின்கீழ் ₹30,000 மானியத்தில் வேளாண் இடுபொருட்கள், கறவை மாடு, தேனீ பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் விதைகள் பெற்று பயனடைந்த பயனாளியிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
பின்னர் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுடன் காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்து பாடவாரியாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமரேசன், தாசில்தார் சந்தோஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சதீஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன் (தொடக்கக்கல்வி), மகாலிங்கம் (இடைநிலைக்கல்வி), ரமேஷ் (தனியார் பள்ளிகள்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.