*2 பெண் உள்பட 4 போலி நிருபர்கள் கைது
திருமலை : ஆந்திர மாநிலம் ஏளூர் மாநகராட்சி 19வது வார்டு கொத்தூரு இந்திரம்மா காலனியைச் சேர்ந்தவர் அப்பளநாயுடு. இவர் கொத்தூர் சுந்தரய்யா காலனி மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார். இங்கு தனியாக குழம்பு, பொரியலும் விற்பனை செய்வாராம். இந்த ஓட்டலுக்கு தேவிபிரசாத் (29), உமாமகேஸ்வரி (28), கன்டாசல துர்கா (32) ஆகியோர் நேற்றுமுன்தினம் சென்றனர். அப்பளநாயுடுவிடம், நாங்கள் உணவு ஆய்வாளர்கள். நீங்கள் விற்பனை செய்யும் உணவு பொருட்களில் ரசாயனம் கலந்திருப்பதாகவும், உங்கள் கடைக்கு உரிமம் இல்லை என்றும் புகார் வந்துள்ளது. எனவே உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நடவடிக்கையை கைவிட வேண்டுமானால் ₹10 ஆயிரம் தர வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அப்பளநாயுடு ₹10 ஆயிரம் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட அவர்கள், பின்னர் எங்கள் மேல் அதிகாரி பேசுவதாக கூறி புலிகா ராம்பாபு (38) அறிமுகப்படுத்தி இனி இவ்வாறு செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என மிரட்டினர். இதுகுறித்து ஏலூர் எஸ்டிபி இ.சீனிவாசலுவிடம் தனக்கு நேர்ந்தவை குறித்து அப்பளநாயுடு புகார் அளித்தார். எங்கள் மேலதிகாரியிடம் பேசுங்கள் எனக்கூறி செல்போனை அவரிடம் கொடுத்துள்ளனர். அதில் பேசிய ராம்பாபு என்பவர், இனி இவ்வாறு செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என மிரட்டியுள்ளார்.
ஆனால் இதில் சந்தேகமடைந்த அப்பளநாயுடு, ஏலூர் டிஎஸ்பி சீனிவாசலுவிடம் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் ஏலூர் நகர இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து ஆசிரம சந்திப்பில் பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 4 பேரும் போலி நிருபர்கள் என்பதும் பத்திரிக்கையாளர்களாக நகரில் வலம் வந்து கொண்டு உணவு ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை என கூறி மிரட்டி பணம் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 பைக், நிருபர்கள் என இவர்களே தயார் செய்து கொண்ட போலி ஐ.டி.கார்டுகள் பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.