கிருஷ்ணகிரி, ஏப்.16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உயர் மற்றும் தாழ்வழுத்த மின்சாரத்தால், வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாவதை தடுத்து, மின்பளுவை குறைக்க ₹1.11 கோடி மதிப்பில் கூடுதலாக 231 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி, மின்னகம் என்ற மின்நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார். இதற்கான பிரத்யேக எண் 9498794987ஐ பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு, மின்விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணில் தமிழகம் முழுவதும் வந்த புகார்களில், சுமார் 95 சதவீதம் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை 10 ஆயிரத்து 241 புகார்கள் பெறப்பட்டு, அதில் 10 ஆயிரத்து 227 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், நெசவு தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக, அதிகபட்ச அளவாக கடந்த 2 ஆண்டில், 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 23ம் தேதி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 576 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் ₹8.19 கோடி மதிப்பில் 2 துணை மின் நிலையங்களில், 16 எம்விஏ திறன் டிரான்ஸ்பார்மர்கள் துவக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 14 துணை மின் நிலையங்களில் ₹48.31 கோடி திட்ட மதிப்பில் கூடுதலாக 173 எம்விஏ திறன்கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில், அதிக மின்பளுவை குறைக்க ₹1 கோடியே 11 லட்சத்து 47 ஆயிரம் செலவில் கூடுதலாக 231 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை நீக்க, ₹72.80 லட்சம் மதிப்பில் கூடுதலாக 150 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆட்சி காலத்தில் அடிக்கடி உயர் மின்னழுத்தம், குறைந்த மின்னழுத்தத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் உள்ள டிவி.,க்கள், பிரிட்ஜ்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாகின. ஆனால், தற்போது அதை தடுக்கும் வகையில், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து தரப்பு பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரத்தின் போது, மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று, அம்மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த, ஒரு புதிய துறையை உருவாக்கி “முதல்வரின் முகவரி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சார விநியோகம் தொடர்பான 1,647 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,588 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 59 மனுக்களுக்கான தீர்வு நடவடிக்கையில் உள்ளது,’ என்றனர்.