வேலூர், ஆக.22: ₹1.10 கோடி சீட்டு பணம் மோசடி செய்யப்பட்டதாக குடியாத்தம் முதியவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த வி.ஜி.மனோகரன்(65) என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்த ஜோதிபிரகாசம், குடியாத்தம் ஆசிரியர் காலனியை சேர்ந்த வி.பி.சுரேஷ்பாபு ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வீட்டுக்கடன் பெற்று கடந்த 2016ம் ஆண்டு, முறையாக அக்கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டேன். இதற்கிடையில் ஜோதிபிரகாசமும், சுரேஷ்பாபுவும் 2012ம் ஆண்டு அவர்களது சீட்டு கம்பெனியில் சேர அணுகினர். நான் அதுபற்றி விசாரிக்கும்போது அந்நிறுவனம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. ஆனால் என்னை சமாதானப்படுத்தி அதில் முதலீடு செய்ய வைத்தனர். அவர்கள் சொன்னதை நம்பி, எனது பெயரிலும், எனது மனைவி மற்றும் 2 மகன்கள் பெயரிலும் மாதம் ₹3 லட்சம் வீதம் 2017ம் ஆண்டு வரை மொத்தம் ₹1 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினேன். அதற்கான ரசீதுகளும் எனக்கு வழங்கப்பட்டன. சீட்டுக்கான காலக்கெடு முடிந்த பின்னர் எனது பணத்தை திரும்ப கேட்டபோது இதுவரை எனக்கு அதை திருப்பி தராமல் இழுத்தடித்து வருகின்றனர். ஆகவே மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.