*தமிழக முதல்வர் காணொலி மூலம் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
கும்பகோணம் : கும்பகோணம் அருகே மேலாத்துக்குறிச்சி கிராமத்தில் கொள்ளிடத்திலிருந்து ரூ.208.22 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் உள்ள மேலாத்துக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் இருந்து கும்பகோணம் ஒன்றியத்தை சார்ந்த 134 குடியிருப்புகளுக்கு ரூ.91.13 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த 67 குடியிருப்புகளுக்கு ரூ.117.09 கோடி மதிப்பில் மற்றும் இரண்டு பேரூராட்சி (திருவிடைமருதூர், வேப்பத்தூர்) குடியிருப்புகளுக்கான ரூ.208.22 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மேலாத்துக்குறிச்சி கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி அமைந்துள்ள இடத்தில் மோட்டர்களை இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தஞ்சாவூர் தலைமை பொறியாளர் ஆறுமுகம் குடிநீர் மோட்டார்களை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நிர்வாக பொறியாளர்கள் ஜெயக்குமார் (தஞ்சாவூர்), முருகேசன் (நாகப்பட்டினம்), சேகர் (தஞ்சாவூர்), உதவி நிர்வாக பொறியாளர் கும்பகோணம் ராணி, உதவி பொறியாளர்கள் யோகராஜ், சௌந்தர்யா, கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், சோழபுரம் பேரூராட்சி தலைவர் கமலா செல்வமணி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், நீலத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் கோவிந்தராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.