அருப்புக்கோட்டை, ஜூன் 7: அருப்புக்கோட்டை நகரின் முக்கிய சந்திப்பு பகுதியாக நாடார் சிவன் கோவில் சந்திப்பு பகுதி, எம்.எஸ் கார்னர் பகுதி இருந்து வருகிறது. தினமும் இப்பகுதிகள் வழியாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் சென்று வருகின்றன. இந்நிலையில் இப்பகுதிகளில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் இப்பகுதிகளில் மின்விளக்குகள் இருந்தாலும் அதிக மக்கள் பயன்பாடு உள்ள பகுதி என்பதால் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. ஆகையால், இப்பகுதிகள் நகரின் முக்கிய சந்திப்பாக உள்ளதால் இங்கு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.