நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய இளம் பெண்கள் பலரிடமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அது தங்களுக்கு அழகான தோற்றத்தைத் தருவதாக நினைக்கிறார்கள். ஆனால், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது, எந்த அளவுக்கு முடிக்கு ஆரோக்கியம் என்பது கேள்விக்குறிதான். ஆனால், பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உண்டு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இது எல்லோருக்குமே பக்க விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்வதினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பெண்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். எந்த வகையான முடியாக இருந்தாலும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யும்போது, வளைவுகள் இல்லாமல் நூல் பிடித்தாற்போல் நேராக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இந்த ரசாயனமும், அதிக வெப்பமும் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம். மேலும், முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடியில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து வறண்ட தன்மையை கொடுக்கும். இதனால், நாளடைவில் சிலருக்கு முடி ஜீவனின்றி பொலிவிழந்து காணப்படும். பொதுவாக, முடி உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு இருக்கும். அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சிலருக்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம். அதுபோன்று, வெயிலில் நடந்தாலோ, குளிர்ந்த நீரில் குளித்தாலோ, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும். ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்று போகலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே, ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கு முன்பு அந்த ரசாயன கிரீம் கூந்தலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுத்துமா என்பதை சோதனை செய்துகொண்ட பிறகு ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்வது நல்லது. …