வேலூர், செப்.1: வேலூர் பள்ளிகொண்டா டோல்கேட்டில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்று டிரைவர்களுக்கு, கலைஞர் நூற்றாண்டையொட்டி நடந்த சிறப்பு முகாமில் துணை போக்குவரத்து ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசுபோக்குவரத்துத்துறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் போக்குவரத்துத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நடந்தது. வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன்(பொறுப்பு), நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜெயக்குமார், உதவி கோட்ட பொறியாளர் சம்பத்குமார், கிருஷ்ணகிரி- வாலாஜா டோல்கேட் செயல் அதிகாரி ஜெஸ்டின் சாம்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ்கண்ணன், கருணாகரன் ஆகியோர் முன்னிைல வகித்தனர்.
முகாமில் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் பேசுகையில், ‘வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு, அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பஸ், ஆட்டோ, லாரி, வேன், பைக் உட்பட 300க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து துணை போக்குவரத்து ஆணையர் லாரி, பஸ் உள்ளிட்ட டிரைவர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.